குரூப் 2, குரூப் 4 தேர்வுகள்:விளக்க அறிக்கை சமர்ப்பிக்க டி.என்.பி.எஸ்.சிக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published Date: March 28, 2023

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

 

தமிழகத்தில் நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மனித வளம் மற்றும் நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கட்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த நேரமில்லா நேரத்தில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் குறித்து சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், நாகை மாலி (மார்க்சிஸ்ட்), அருள் (பாமக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர்.

அவர்களது கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் குறித்து நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை மனிதவள மேலாண்மைத் துறைச் செயலருக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகளிடம் பதில் பெற கேட்டுக் கொண்டேன். பணியாளர் தேர்வாணையம் தன்னிச்சையான அமைப்பாகும்; அரசின் திணிப்பு இல்லாமல் செயல்படுகிறது.

குரூப் 4 தேர்வு தொடர்பாக பொதுவெளியில் வந்த தகவலுக்கும், டி.என்.பி.எஸ்.சி. அளித்த தகவலுக்கும் தொடர்பே இல்லை. தேர்வு மைய எண்ணின் அடிப்படையில் எந்த மையத்தில் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது தெரியும்.

தென்காசி மாவட்டத்தில் 8 மையங்கள் இருந்தன. தேர்ச்சி பெற்றோரில் முதல் 500 பேரில் 27 பேரும், முதல் 1,000 பேரில் 45 பேரும், முதல் 10,000 பேரில் 397 பேரும் தென்காசி மையத்தைச் சேர்ந்தவர்கள். இதுவே அந்த மாவட்டத்தின் உண்மை நிலை.

குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இரண்டுக்கும் தனித்தனி முன்னுரிமைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இளநிலை உதவியாளர் தேர்விற்கு தொழில்நுட்பத் தகுதி தேவையில்லை. ஆனால் தட்டச்சர் பணிக்குத் தொழில்நுட்பத் தகுதி அவசியம். இந்த வேறுபாட்டால் தேர்ச்சி பட்டியலில் மாற்றம் இருப்பது இயல்பு. எனவே அதுகுறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை.

அறிக்கை அளிக்க... நில அளவையர் (Surveyor) தேர்வைப் பொருத்தவரை 29,570 பேர் தேர்வு எழுதியுள்ளனர். காரைக்குடியில் ஒரு மையத்தில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வெளியானது. மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 500 பேரில் 200 பேரும், முதல் 1,000 பேரில் 377 பேரும், முதல் 2,000 பேரில் 615 பேரும் ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள்.

1,000 காலியிடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்க 3,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த 3,000 பேரில் 700 பேர் ஒரே மையத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். கடந்த ஏழு ஆண்டுகளில் இவ்வாறு ஒரு மையத்தில் அதிக தேர்ச்சி பெற்ற வரலாறு உள்ளதா, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முந்தைய முடிவுகளுடன் தற்போது வந்துள்ள முடிவுகளுக்கு ஒற்றுமைகள் உள்ளதா என்பதற்கான விரிவான அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி.யிடம் கேட்டுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 

Media: Dinamani